நான்கு கவிதைகள்

குட்டி ரேவதி

1. மாயக்குதிரை

நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர் தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை.



2. மீன்தொட்டி

மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள்
வளையவரும் தொட்டியாய் இருந்தேன்
இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை
பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை
உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி
குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும்
உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும்


ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும்
கடலாக்கியது என்னை
சுவரை எட்டியுதைத்தன என் குஞ்சுகள்.



3. நம்மைப் பிடித்த பிசாசுகள்

சகோதரி… இன்னும் பல முலைகளை
வனைந்தெடுப்போம்
கல்லால் அடித்தும் கத்தி முனையிலும்
உயிர்த்த முலைகளும் உண்ணப்படும் வேளையில்
உலகின் தானியங்களாகிப் போன
அவற்றைப் பேண வேலிகள் இல்லை
வல்லூறுகள் ஏன் தானியக்கொள்ளையில்?
வெயிலைத் தின்று வெட்டவெளியை நுகர்ந்து மூச்சிடும்
அக்கிழவியின் முலைகள்
அவளைப் பீடித்த பிசாசங்களாய்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
நெஞ்சை முட்டிக்கொண்டு
உலர்ந்த வரலாற்றின் எல்லை வரைபடங்களே
அப்பிசாசுகளும் ஆகவே சகோதரி
நீரருந்த நீர்க்குளங்களாயிருந்த முலைகளை
தீராத வேதனைக் கலயங்களாக்கோம்
ஒருநாளேனும் கற்களாக்கி அம்முலைகளை
கவண் கொண்டெறிவோம்
ஒற்றை முலையோடேனும் அலைவோம்
நம் சூரியனைத் தூக்கிச் சுமந்து.



4. புலிகள்

நான் ஆண் புலியாம் நீ பெண் புலியாம்
அன்பைக் கொடும் வாயால் கவ்வியும்
கூர்நகங்கள் உடல் பதியப் பிடித்துப் பிராண்டியும்
வலிமையின் ஆழங்களை
ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வோம்

உன் கண்களின் இலைத்தளிர்கள்
காட்டுக்குள் உன்னை ஒளித்துக் காட்டும்
என் உடலை மரங்களின் திடங்களில்
தொலைத்துக் காட்டுவேன்
இரவுகளில் நாம் புணரும்போது
உனக்காக அதுவரை ஒளித்து வைத்திருக்கும்
காமம்
கூவி ஆர்ப்பரிக்கும் என் தொண்டையிலிருந்து


தாழம்பூ மணம் வீசும் என் உறுப்புகளின்
மறைவிடங்கள் உனக்கானவை
பாறைகளில் வடியும் சுனைகளைப் போன்று
உன் மார்பில் வடியும் பால்சுரப்பைக்
குட்டிகள் கவ்விக்கிடக்க
நான் அங்கே உன் அன்பைப் புறக்கணித்துக் கிடப்பேன்

நீ என்னை வேட்டையாடமுடியாத போது
நான் உன்னைக் கோதிக்கொடுப்பேன்
என் இருப்பைச் செரிக்க
முடியாது நீ திணறுகையில்
நீ என் இரையாகத் துடிப்பாய்
உன்னை வேட்டையாடித் தீர்ப்பேன்

இப்படித்தான் பின் நான் பெண் புலியானதும்
நீ ஆண் புலியானதும்.



குட்டி ரேவதி