from Kuruntokai

Various Tamil Poets

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

குறுந்தொகை 7 – பெரும்பதுமனார்.





சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

குறுந்தொகை 142 – கபிலர்.




யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

குறுந்தொகை 25 – கபிலர்.





மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

குறுந்தொகை 28 – ஔவையார்..





மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.

குறுந்தொகை 108 – வாயிலான் தேவனார்.





குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

குறுந்தொகை 157 – அள்ளூர் நன்முல்லையார்.